"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, June 9, 2017

பிரார்த்தனை - தியானம் - ஓஷோ

பெளத்தம் பற்றி ஓஷோ குறிப்பிடும்பொழுது..

கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து பெளத்தம் வேறானது.
இம்மூன்று சமயங்களும் ஏதோ ஒரு வகையில் உரையாடலை பற்றிக் கொண்டிருந்தன. உரையாடல் என்று வந்தாலே இருமையை, துவைதத்தை வலியுறுத்தல்தான்… 

பிரார்த்தனை என்றவுடன் உன்னிலும் வேறாக கடவுள் ஒருவர் இருக்கின்றார். நீ அவருடன் பேசுகிறாய் என்று பொருளாகி விடுகிறது. அந்த உரையாடல் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கு நிலவுவது பிரிவினைதான். பிளவுதான். பிரார்த்தனை என்பதே இன்னொருவரிடத்தில் முறையிடுவது.. உண்மையோ உண்மையில்லையோ யாரிடமாவது முறையிடுவதுதான்.

ஆனால் பெளத்தமோ தியான மதம். மெளனமே இதன் வழி.  தியானத்தில் முறையீடே கிடையாது, ஒருவர் மெளனத்தில் வீழ்ந்துவிடுவது.. ஒன்றுமில்லாமல் அப்படியே காணமல் போய்விடுவது. ஒருவர் இல்லாமல் போய்விடும்போது எஞ்சி நிற்பது தியானம் மட்டுமே.

                                *********************

புத்தர் தியானத்தை மட்டுமே வலியுறுத்துகிறார். அது கடவுள்தன்மையின் ஒரு பக்கம் மட்டுமே. 

முகம்மது நபி தொழுகை, இசை, பாடல் இவற்றினை வலியுறுத்தினார். குரானைப்போல் வேறு எந்த வேதநூலிலும் அந்த அளவு இசையைக் காணமுடியாது.

உலகில் மூன்று வகையான சமயங்கள் மட்டுமே உண்டு. 

இஸ்லாம், இந்து, கிறிஸ்துவம், யூதம், இவை இசைச் சமயங்கள். 

இரண்டாவதாக பெளத்தம், தாவோயிசம் போன்றவை தியான சமயங்கள். 

சமணமோ கணிதச் சமயம். மகாவீரர் சார்புடைமைக் கோட்பாடு பற்றிப் பேசிய முதல் மனிதர். அதன்பின் இருபத்தி ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் ஐன்ஸ்டீனால் அறிவியல் பூர்வமாக அதை நிரூபிக்க முடிந்தது.

இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்த முழுமையானதொரு சமயத்தையே நான் (ஓஷோ ) வழங்க  முயல்கிறேன்.

ஓஷோ
தம்மபதம் I

Tuesday, January 31, 2017

சிறுபுல்லும் பிரபஞ்சமும் -- ஓஷோ

'தம்ம' என்ற சொல் பல பொருள் தரும். இயற்கைச் சட்டம் அல்லது விதி என்ற ஒரு பொருளும் உண்டு. விதி என்பது  பிரபஞ்சத்தையே ஒன்றிணைத்து வைத்திருக்கும் மேலான விதி.. கண்ணுக்குப் புலப்படாத விதி., புதிரான விதி., ஆனால் சர்வ நிச்சயமாய் இருக்கும் விதி.

இல்லாவிட்டால் பிரபஞ்சம் சிதறுண்டு போகும். எல்லையற்ற, விசாலமான பிரபஞ்சம் எவ்வளவு இணக்கமாக, அமைதியாக, ஆற்றலுடன் ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உணருங்கள். எல்லாவற்றையும், எல்லாவற்றோடும் இணைக்கும் ஆதார சக்திப் பிரவாகம் ஒன்று இருக்கின்றது என்பதற்கு, இந்த ஒத்திசைவான இயக்கமே சான்று.

எல்லாவற்றையும் இணைக்கும் பாலமாக அமைந்திருப்பது அந்தச் சக்திப் பிரவாகம். நாம் தீவுகள் அல்ல. ஒரு சிறு புல்லின் இலையும் மாபெரும் நட்சத்திரத்தோடு பந்தப்பட்டிருக்கின்றது. ஒரு சிறு புல்லின் இலையைச் சிதைத்தாலும் மதிப்புமிக்க பிரபஞ்சப் பகுதி ஒன்றைச் சிதைத்ததாகவே ஆகிவிடும்.


*********************************************************************************
சொற்கள் சக்தியற்றவை. பகுதி உண்மையைத்தான் சொற்கள் உணர்த்தும். முழுமையாக உணர்த்த வல்லது மெளனமே.
அர்த்தம் என்னுடனேயே தங்கிவிட சொல் மட்டுமே உங்களை அடைகிறது. அந்தச் சொல்லுக்கு உங்கள் அர்த்தத்தையே நீங்கள் தருகிறீர்கள்.அதில் உங்கள் அர்த்தமே இருக்கும். என் அர்த்தம் இருக்காது

வார்த்தைகளை புரிந்து கொள்வது மிகச் சிரமம்.
அதைவிட உங்களுக்கு புரியவில்லை எனப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். இந்த இரண்டுமே ஏறத்தாழ சாத்தியமில்லை. அதனால் இருக்கும் ஒரே சாத்தியக்கூறு தவறாகப் புரிந்து கொள்வதுதான்.


********************************************************************************************************************************** 

காலம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு.  இருப்பதென்னவோ எப்பொழுதும் இப்பொழுதுதான். இயற்கைக்கு இறந்தகாலமும் தெரியாது. எதிர்காலமும் தெரியாது. இயற்கை அறிந்ததெல்லாம் நிகழ்காலம் மட்டுமே.

ஓஷோ
தம்மபதம் 1
கண்ணதாசன் பதிப்பகம்

Thursday, December 15, 2016

தம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ


வெறுப்பு என்பது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பது. நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது. இறந்தகால, எதிர்காலத் தொடர்பில்லாமல் வெறுப்புக் காட்டவே முடியாது.

நேற்று யாராவது உங்களை அவமானப்படுத்தி இருப்பார்கள். அதை ஒரு மனக்காயமாக,  தலைவலியாக நீங்கள் சுமந்து கொண்டு இருக்கலாம். அல்லது நாளை யாராவது  உங்களை அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமோ, அதன் நிழலோ இருக்கலாம்.

இப்படிப்பட்ட வெறுப்பு,  வெறுப்பையே உருவாக்கும்.  வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும்போது அவர் மனதில் உங்களுக்கு எதிரான வெறுப்பையும் உருவாக்கி விடுகிறீர்கள்.

ஆனால் அன்புக்கு இறந்தகாலமும் கிடையாது எதிர்காலமும் இல்லை. அன்பு காரணமில்லாமல் நிகழ்வது. அது உங்கள் பரவசத்தின் வெளிப்பாடு. பரவசமோ விழிப்பின் துணைத் தயாரிப்பு. விழிப்புணர்வு ஏற்பட்டதும் ஆனந்த பரவசம் தானாக வந்துவிடும்.

நமது அன்பு வேறு... உண்மை அன்பு வேறு.

நமது அன்பு வெறுப்பின் மறுபக்கமே தவிர வேறில்லை. அதனால் நம் அன்பிற்கு ஒரு பின்னணி இருக்கும். யாராவது உங்களிடம் நேற்று இனிமையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு அவர்மீது அன்பு தோன்றி இருக்கும். அது அன்பே அன்று.. வெறுப்பின் மறுபக்கம்தான்.

அதனால்தான் எந்தக்கணத்திலும் அன்பு வெறுப்பாக மாறிவிடக்கூடியதாக இருக்கின்றது. மாறுவேடம் பூண்ட வெறுப்புதான் உங்கள் அன்பு.

உண்மையான அன்பிற்குப் பின்னணி தேவை இல்லை. உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பொழிவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமும் தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.

நான் குறிப்பிடும் அன்பு அப்படிப்பட்ட அன்பு. இதற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால் அதுவே சுவர்க்கம். அன்பே ஒளி. உங்கள் இருப்பின் ஒளி.

அன்பு மட்டுமே வெறுப்பை விரட்டும். ஒளி மட்டுமே இருளை விரட்டும். இதுவே நிரந்தரவிதி. புத்தர் இதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்
               “ஏஸ் தம்மோ ஸனந்தனோ..”

ஓஷோ
தம்மபதம் 1

Wednesday, October 26, 2016

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 
ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


 நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது. 
பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

 அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.


Sunday, October 23, 2016

எளிய சமையல் நுணுக்கங்கள்


தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கு தேவையான டிப்ஸ்களை வழங்கும், சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி:

பூந்திக்கு மாவு பிசையும் போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் கலந்து பிசைந்தால், பூந்தி உப்பி வரும்.

சிறுதானியங்களில் பலகாரம் செய்யும் போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், மிருதுவாக இருக்கும்.

சர்க்கரைப் பாகு செய்யும் போது, பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால், எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.

குலாப் ஜாமூன் பார்க்கும் போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து, லேசாக சூடு செய்து, அதில் ஜாமூனை ஊற வைத்தால் மிருதுவாகி விடும்.

ரசகுல்லா செய்யும் போது, முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரசகுல்லாவின் சுவை, ஒரே நாளில் மாறிவிடும்.

அல்வா செய்யும் போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பது போல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால், அல்வா கெட்டிப்படும்.

பயத்தம் லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன், பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.

சீடை உருட்டிய பிறகு, அதன் மேற்புறத்தில், ஊசியால் ஆங்காங்கே சிறிய துளையிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.

முறுக்கு செய்யும் போது, நீங்கள் எடுக்கும் அளவில், கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை, மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு, மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால், மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.எண்ணெய் பலகாரங்கள் செய்யும் போது,

எண்ணெயில் கோலிக்குண்டு அளவு புளியைச் சேர்க்க வேண்டும். பிறகு, பலகாரங்கள் பொரித்தெடுத்தால், அதிக எண்ணெய் குடிக்காது; எண்ணெயும் பொங்கி வழியாது.

நன்றி தினமலர்  23.10.2016

Monday, May 30, 2016

கிரிவலமும் நாய்க்குட்டியும்

சித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது.  சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு,  நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள்.  குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..

அந்த இடத்தில்  ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும்.  காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த  தெரு நாய்க்குட்டி.

இப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்  மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது..  அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா? அந்த ஃபிரீக்வன்சிதான் அதை  இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..


இப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில்  பிஸ்கட் பாக்கெட் வாங்கி,  அதற்கு கையில் வைத்துக்கொண்டே,  இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில்  அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின..  மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.

பிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.

வீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.

FRACTION DEMANDS, TOTALITY SUPPLIES என்பது இயற்கை நியதி..
தேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி