உன் பெற்றோரை, உன் ஆசிரியர்களை, அரசியல்வாதிகளை, சாமியார்களை, இப்படி சமூகத்தில் பலரையும், வெகுவாக நம்பிக் கொண்டிருந்து விட்டாய். அவர்கள் சொன்னதை எல்லாம் மூட்டை கட்டி உன்னுள் அடுக்கி வைத்துக் கொண்டே இருந்துவிட்டாய்.
ஏழ்மையுடன் இருக்கிறாய். காந்தி ஏழைகளைத் தரித்திர நாராயணர்கள் என்றார். ஏழைகள் கடவுள்களாம். ஏழ்மை தெய்வீகமாம். இது உண்மையென்றால் ஏழையாக இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள் ?
இந்த வியாக்யானத்தை சமணர்கள், பெளத்தர்கள் போன்றோர் கடவுளை நம்பாதவர்கள் என்பதால், அவர்களுக்கு தரமுடியாது அல்லவா ? அவர்களுக்காகவே கர்மா கோட்பாடு வந்தது
உன்னுடைய முற்பிறவிகளில் பாவங்கள் செய்துவிட்டாய். அதனால் இந்தப் பிறவியில் ஏழையாக இருக்கிறாய்., துன்பங்கள் அனுபவிக்கிறாய். முற்பிறவியில் பாவங்கள் செய்திருப்பதால் அதை இந்தப் பிறவியில் கழித்துவிட வேண்டும். அதனால் வறுமை, துன்பம் அனுபவி. எதிர்த்தால் இன்னும் புதிய கர்மவினைகளைப் புரிந்து அடுத்த பிறவிக்கு வழிவகுக்கிறாய். மனதார துன்பப்பட்டு கர்மாவைக் கழித்துவிடு.
இப்படிச் சொல்லிச் சொல்லி மனிதர்களை மாடுகளாகவும், எருமைகளாகவும் ஆக்கிவிட்டார்கள். குற்ற உணர்ச்சி கொள்ள வைத்து, எந்த எதிர்ப்பும் இன்றி துயரத்துடனும், துன்பத்துடனும் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.
நான் சொல்வதை வெறுமனே நம்பாதே. நம்புகிறவர்களை உருவாக்குவதல்ல என் வேலை. முகம்மதுவை, கிறிஸ்துவை, புத்தரை நம்பிக்கொண்டிருந்த நீ என்னையும் நம்ப ஆரம்பித்துவிடாதே. என்மீது நம்பிக்கை வை என்று நான் சொல்லவில்லை. எல்லா நம்பிக்கைகளையும் ஓரம்கட்டிவிட்டு நீயாக உனக்குள் பார் என்கிறேன். பரிசோதனைகளை மேற்கொள். தியானி, அனுபவங்களை உணர்ந்துபார். சாத்திரங்களை நம்பாமல் உன் அனுபவங்களை நம்ப ஆரம்பித்து விடுவாய் அனுபவங்கள் உன்னுடையது ஆகும்வரை எந்தப்புரிதலாலும் பயன் இல்லை.
உனக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் உன்னிடம் ஏற்கனவே உள்ளது. உள்ளே திரும்பிப் பார்க்க வேண்டியது மட்டுமே பாக்கி. நாம் கடவுளின் ஒரு பகுதி. கடவுள் நம்மில் ஒரு பகுதி. நீ உள்ளே திரும்பிக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறது.
ஆனந்தம் அன்பு பரவசம் என்று வற்றாத பொக்கிசம் உள்ளே இருப்பதை காண்பாய்.
.
ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா
.