"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.





இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.

Saturday, August 29, 2009

மனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..!!!

மிருகம் ஐந்தறிவு உள்ளது, மனிதனோ ஆறறிவு படைத்தவன், மிருகங்கள் உணவுக்காக
உணவை உற்பத்தி செய்ய தெரியாததால் பிற உயிரை கொன்று தின்கின்றன.

மனிதன் ருசிக்காக மிருகங்களை கொன்று தின்று வாழ்கிறான்.

அதே சமயம் சீவகாருண்யத்துடன் உயிர்களைப் பார்ப்பவர்களும் உண்டு.

இந்த காணொளியை என் முந்தய இடுகையில் க. தங்கமணி பிரபு பின்னூட்டத்தில் தெரிவித்த இணைப்பில் முதன்முதலாக பார்த்தேன். மனிதம் இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ? அதிர்ச்சியாக இருந்தது.

இங்கு ஒருபுறம் முகம் தெரியாத நண்பர்கள் ஒன்று சேர்ந்து செந்தில்நாதனை இயல்புக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம்.

கைக்கெட்டும் தூரத்தில் மனிதனை மனிதன் சத்தமிடக்கூட வாய்ப்பின்றி, காக்கை குருவியை சுடுவதுபோல் சுடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சுடப்பட்டவன் நிலையில் இருந்து பார்க்கிறேன்.

அவன் மனம் அந்த கணத்தில் என்ன பாடுபட்டிருக்கும் ?

வார்த்தைகள் எழும்ப மறுக்கின்றன…

எதைக் குற்றஞ் சொல்வது, மனிதன் இப்புவியில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதற்க்கு
அறிவியலையா, மதத்தையா, இனத்தையா, இது நமக்கு தேவைதானா?

கதிரின் இடுகை

நர்சிம்


இலங்கை இராணுவத்தின் கோரம் : மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்




பார்த்தால் மனம் பதைபதைக்கும் இந்த நிகழ்வுக்கு என்ன பதில் ? இதை அந்த நாடே அனுபவிக்கும், இயற்கைச் சட்டம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம் !

Friday, August 28, 2009

உங்களை பாம்பு கடித்திருக்கிறதா ?

சில்லென்ற காற்று முகத்தில் அறைகிற மாதிரி வீசிக் கொண்டிருந்தது. இங்கு எப்பவுமே இப்படித்தான், நல்ல கிராமம், ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, மெள்ள மெள்ள விவசாயம் குறைந்து பெரிய பெரிய குடோன்கள் முளைத்துவிட்டன. இவை பனியன் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கு வசதியானவை, துணியை தயார் செய்து அதை வேண்டிய வடிவம், அளவுகளில் வெட்டி தயார் செய்வதில் கழிவுகள் ஏதும் வெளியேறாததால் அக்கம்பெனிகளும் வந்துவிட்டன.

நகரத்தில் ஆட்கள் பற்றாக்குறை, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி இயங்கி கொண்டிருக்கின்றன.கிராமத்திற்கு பஸ் அனுப்பி வேலைக்கு ஆள்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் கிராமத்திலேயே இந்த கம்பெனிகள் அமைவதால் பல வசதிகள்., சில சிரமங்கள், அதில் ஒன்றுதான் எனக்கு தினமும் வீட்டுக்கு போவது என்பது, வீட்டுக்கு சுமாராக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் வரும். பைக்கில் இந்த குளிரில் வீட்டிற்கு செல்வது சற்று சிரமாகத்தான் இருக்கும்.

விளக்குகள் அணைக்கப்பட்டன.வேலை முடிந்தது. வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப நானும் வீட்டிற்கு கிளம்பினேன். சட்டென ஞாபகம் வந்தது. மனைவியும் குழந்தைகளும் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்கள். சரி இன்றைக்கு இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான், உணவுக்குத்தான்...ம்ம்சரி

இங்கு பெரிய அளவில் உணவுவிடுதி ஏதும் கிடையாது. அரை கிலோ மீட்டர் சென்றால் ஊர் மையத்தில் மங்கலான குண்டுபல்பு வெளிச்சத்தில் அமைந்துள்ள குடிசைவீடுதான் இங்கு உள்ள ஒரே உணவு விடுதி, கிடைப்பதை வைத்து வயிற்றை நிறைத்துக்கொண்டு இன்று இங்கேயே இருக்கிற ஓய்வறையில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒத்தையடிப்பாதை வழியாக சென்றால் பக்கம், சீக்கிரம் சென்று திரும்பிவிடலாம்.
உணவை முடித்துக் கொண்டு திரும்பினேன். தனியாக வருவதால் பயம் வேறு, அப்பயத்தை துரத்த வேண்டி அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா எனப் பாடிக்கொண்டே நடையை எட்டிப்போடுகிறேன்
சட்டென இருள் சூழ்ந்தது. சரியான நேரத்திற்க்கு எது நடக்குதோ இல்லையோ மின்சாரம் போவது மட்டும் நடந்து விடுகிறது.
தொழிற்சாலை வாசலை அடைந்து, நிதானத்திலேயே கேட்டை உட்புறமாக பூட்டிவிட்டு, ஓய்வறைக்கு நகர்ந்தேன். தொழிற்சாலை கட்டிடத்தை விட்டு தள்ளி உட்புறமாக 200 அடி தொலைவில் அறை, கட்டில், குளிக்கும் வசதிகளுடன் ஓய்வறை,

வழக்கமான பாதைதான், முழங்கால் உயரத்துக்கு செடிகள் கண்டபடி வளர்ந்து பாதையை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிட வேலை நடந்த போது ஏற்பட்ட குழிகள், மண் மேடும் பள்ளமுமாய், அந்த இடத்தை கடக்க முயற்சிக்கும் போது சட்டென புத்திக்கு ஏதோ உரைக்கிறது, காலுக்கு கீழ் ஏதோ மிதிபடுவதைப்போல் உணர்வு, சற்று உருண்டையாக , கனமாக, வழுவழுப்பாக செருப்புக்கு கீழ் உணர முடிந்தது. அனிச்சை செயலாய் உடல் துள்ள, அந்த இடத்தை விட்டு எட்டிக் குதித்து,எப்படி அறைக்கு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது, உடல் நடுங்குகிற நடுக்கம், படபடவென்ற இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் இதெல்லாம்,

கதவை நீக்கினேன், மேசைமீது இருந்த, குளிர்ந்த நீரை சொம்போடு எடுத்து அப்படியே அண்ணாந்து ஒரே மொடக்காக குடித்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டேன்,. கிறுகிறு என்று வந்தது. கண்ணை மூடிக்கொண்டேன்

யார் செய்த புண்ணியமோ, தப்பித்தேன் என நினைத்துக்கொண்டேன்.

பாம்புகள் பலவிதம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், விசமுள்ளது, விசம் இல்லாதது, என்று, நமக்கென்ன தெரியும் எந்த பாம்பு எப்படி இருக்கும், எதில் விசம் இருக்கும் என்று? காற்று வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது, சன்னலை திறந்து வைத்தேன்

அப்போது கால் பாதம் சற்றே ஈரமானது போன்ற உணர்வு, குடித்த தண்ணீர் சிந்திவிட்டதோ, சட்டென மனம் எச்சரிக்கை செய்ய கையால் தொட்டு பார்த்தேன், பிசுபிசுப்பாக இருந்தது, கையில் ஒட்டுவதுபோல் தெரிந்தது,கீறல் இருந்தது. வலிக்கவும் ஆரம்பித்தது.
கையை கிட்டே கொண்டுவந்து பார்த்ததில் இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், சிவப்பாக தெரிந்தது, இரத்தம் என மனது அலற ஆரம்பிக்க, முகர்ந்து பார்த்தேன், வாடையை வைத்து இரத்தம்தான் என உறுதி செய்தேன்.

அய்யய்யோ ! பாம்பு கடித்து ஒரேடியாக போய்விட்டால் என்ன ஆவது, மனைவி, குழந்தைகள் எல்லாம் வெளியூர் போன சமயத்தில் ஏதாவது ஆகிவிட்டால் ? ஒருவேளை அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்காமலே போய்விட்டால் என்ன ஆகும்?

அட அது எப்படியோ போகட்டும் அக்கம் பக்கத்தில் யாராவது விடிந்தவுடன் எட்டிப்பார்த்து தகவல் சொல்லாமலா போய்விடுவார்கள்.,

இந்த வாரம் அனுப்ப வேண்டிய சரக்கு இன்னும் தைக்க முடியாமல் இருக்கிறது, இந்த நிலையில் இப்படி என்றால் என்ன செய்வது, விடியும் வரை தாங்குமா, இந்த நேரத்திற்கு திருப்பூரில் எந்த ஆஸ்பத்திரி இருக்கும், டாக்டர் யாராவது இருப்பார்களா? இருந்தாலும் விசமுறிவு வைத்தியம் நல்லமுறையில் தெரிந்திருக்குமா

செல்போனை எடுத்தேன், யாரை அழைக்க,? உடனடியாக இங்கு யாராவது வந்தால்தான் நாம் உயிர் தப்பிக்க முடியும். போனை அழுத்த இயங்க மறுத்தது, ச்ச்சே மாலையிலேயே சார்ஜ் குறைந்து இருந்தது, வேலை மும்முரம், மறந்தாயிற்று

இனி ஒரே வழி, எப்படியாவது தொழிற்சாலைக்கு சென்று ஜெனரேட்டர் போட்டுத்தான் ஆகவேண்டும், அப்போதுதான் செல்போன் சார்ஜ் பண்ணமுடியும். அல்லது இருட்டில் சரக்குகளுக்கிடையே சென்று தடுமாறிக்கொண்டே அலுவலகத்தை திறந்து போன் பண்ண வேண்டும்.

எங்கே செல்வது, ஓரேடியாக கோவை சென்றுவிடுவது நல்லதோ?

எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள், இரத்தமே முழுவதாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தால் கூட செய்ய முடியும், அதுவரை தாங்குவேனா?

குழந்தைகள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
அவர்களுக்கு மரணம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கும் வயதாயிற்றே? தாங்கிக் கொள்வார்களா? இவர்கள் ஒருபுறம் இருக்க, மனைவியை நினைத்தால் இன்னும் கஷ்டம்..
நீங்க இல்லைன்னா நான் இருக்கமாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளே இவ, என்ன பண்ணப்போறா? அப்படி ஏதேனும் அவ தவறான முடிவெடுத்திட்டா குழந்தைகளின் கதி?

இருட்டினூடே வெளியேறி தொழிற்சாலைக்கு செல்வதே இப்போதைக்கு ஒரே வழி, இருட்டினுள் துழாவ கட்டிலின் அருகே ஒரு பனியன் துணி நீளமாக கயிறுபோல் கிடந்தது தட்டுப்பட்டது.எடுத்து கணுக்காலோடு சேர்த்து இறுக்க்கிக் கட்டிக் கொண்டேன், விசம் ஏறாமல் இருக்க வேண்டும்.மீண்டும் இருட்டினுள் அதே வழியில் நடக்க வேண்டும், கால் மரத்துப்போக ஆரம்பித்தது. வாழ்வா சாவா போரட்டம் என்றால் என்ன என புரிந்தது.

பயமாக இருந்தது. இன்னும் ஏதேனும் பாம்பு இருந்தால்,? சரி இனி எந்த பாம்பு கடித்தால் என்ன? ஏற்கனவே கடித்துவிட்டதே,, மனதை தைரியப்படுத்திக்கொண்டேன்.

தடுமாறி எழுந்து தொழிற்சாலையை நோக்கி நடந்தேன், இல்லை தவழ்ந்தேன், சரி எப்படியோ சென்றேன். கையில் இருந்த சாவியால் கதவை நீக்கினேன், இதெல்லாம் ஒரு யுகம் போல் தெரிந்தது.

சட்டென முகத்தில் வெளிச்சம் அடித்தது, மின்சாரம் வந்துவிட்டதோ?

கண்ணுக்கு எல்லாமே மங்கலாக தெரிந்தது, யாரோ இருவர் எதிரே நிற்பது போல் தெரிந்தது, உற்றுப்பார்த்ததில் தலையில் கிரீடம் வைத்துக்கொண்டு கொம்புடன்…. குழப்பத்துடன் பார்த்தேன்,ஒன்றுமே தெரியவில்லை, தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கொஞ்சதூரம் நடந்த மாதிரி தெரிந்தது.பின்னர் தேரில் ஏறி பறந்தது தெளிவாக உண்ர முடிந்தது. சொர்க்கமா, நரகமா எங்கே போகிறோம் என்றும் புரியவில்லை,

கண்விழித்துப்பார்த்தேன். வெண்ணிற் ஆடையில் அங்குமிங்கும் தேவதைகள் நடந்து கொண்டிருந்தன.

எதிரே மனைவியும் குழந்தைகளும், மனைவி அழுகையை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். மருத்துவமனையில் படுக்கையில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன்

தூரத்தில் அலுவலக நண்பர்கள், அருகில் அம்மா, அப்பா,

எனக்கு என்ன நடந்தது என்று நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. கையில் குளுக்கோஸ் வாட்டர் ட்யூப் வழியாக உள்ளே ஏறிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மாதிரியாக இருக்க, கண்ணை மூடிப் படுத்துக்கொண்டேன்.

மதியம் மருத்துவர் வந்து எல்லாமே நல்லாயிருக்கு, எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல மாலையில் வீடுதிரும்பினேன். இரண்டுநாள் ஓய்விற்கு பின் தொழிற்சாலைக்கு திரும்பினேன். உடல் முழுவதும் இலேசான வலி,

தொழிற்சாலையில் உள்ளே செல்லும் வழியில் ஏதோ பைப் உடைந்து விட்டது போல. பிளம்பர் வந்து பிரித்து போட்டு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்.

அருகில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்னுச்சாமி நின்றிருந்தார், என்னைப் பார்த்தவுடன் ”அய்யா வாங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லீங்களா?” என்று கேட்டவாறே என் பதிலுக்கு காத்திராமல் ”என்னையா உங்கோட ஒரே வம்பாப் போச்சு, தேவையானத கொண்டு வரமாட்ட, இங்க வந்து அதுவேணும், இது வேணும் அப்படின்னுட்டு, இப்ப என்ன, பைப்ப சூடுபண்ண ஏதாவது வேணும் அவ்வளவுதானே?” என்றவாறு அங்கும் இங்கும் துழாவியவர் சட்டென காலில் தட்டுப்பட்ட ஏற்கனவே பாதி எரிந்த கம்பிகள் வெளியே துருத்திக்கொண்டிருந்த, பழைய சைக்கிள் டயரை எடுத்து இந்தா என்று பிளம்பர் கையில் கொடுத்துவிட்டு, என்னிடம் திரும்பி ”அய்யா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு, திடீர்ன்னு நீங்க மயங்கிக் கிடந்ததை காலையில் பார்த்து எனக்கு உசிரே போச்சிங்க, அப்புறம் ஆசுபத்திரில சேர்த்து உங்களுக்கு ஒண்ணுமில்ல அப்படின்னு கேட்ட பொறவுதான் நிம்மதி ஆச்சுங்க… என்றவாறு என் கையை ஆதரவாகப் பிடித்தார். எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

Tuesday, August 18, 2009

ஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்?

இதுதான் என் வாழ்க்கை, என் வாழ்வும் சாவும் இரண்டும் என் கையில் என்பதே ஆன்மீகம்.

நண்பர் எல்லாம் இருக்கும் வரை அவர்களின் இடுகையை படித்தேன். அவருடைய கருத்துக்களோடு ஒத்துப் போன போதிலும் சில கருத்துப் பகிர்வுகள் தேவை என நினைத்ததால் இந்த இடுகை. எனவே இதை படிக்கும் முன் அவரது இடுகையினை படித்துவிடுதல் நலம். அதன் தொடர்ச்சியே இது:))

\\ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. \\ இது நண்பரின் கருத்து.,

இனி எனது கருத்து

மீன் தண்ணீருக்குள் இருந்து வாழ வேண்டும் என்பது விதி.

ஆனால் ஆற்று நீரோட்டத்தின் வழியே வாழ்வது, விதியின் வழியே வாழ்வது ஆகும் ஆனால் எதிர்நீச்சல் போட்டு, தன் விருப்பப்படி வாழ்வது முயற்சி ஆகும். ஆனால் இரண்டுமே தண்ணீரை விட்டு வெளியே வராது, வந்தால் மரணம்தான்.

இது மனித வாழ்வில் உன் முயற்சியினால். எப்படி வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொள் என அனைத்தையும் இயற்கை விதி நமக்கு வழங்கி இருக்கிறது. இது நம் முறை, விளையாட்டாக சொன்னால் பந்து நம் கையில், என்னவேண்டுமானாலும் செய்யலாம், அந்த உரிமையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வது நம் சுதந்திரம்:))

ஆன்மீகம் என்பது விளக்க வேண்டிய ஒன்றே. அந்த விளக்கம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் சரியாக உணர்ந்து இருக்க வேண்டும் அல்லது சரியாக வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும். அப்படி வாழ முழுமையாய் உணர்ந்தால்தான் வாழ முடியும்.

இந்த கருத்தை, அதாவது ஆன்மீகத்தை விளக்க முயலாவிட்டால் நாம் எதிர்கால சந்ததியினருக்கு தவறிழைக்கிறோம் என்பதே என் கருத்து.


ஆன்மீகம் என்பது ஒருங்கிணைத்துப் பார்ப்பது

அறிவியல் என்பது தனித்தனியாக பார்ப்பது

இவ்வளவுதான். இதை சரியாக பிடித்துக் கொண்டால் ஆன்மீகம் என்பது எளிதில் விளங்கிவிடும்.

ஆன்மீகம் என்பது வேறொன்றுமில்லை, உடல்நலம், உயிர்நலம், மனநலம், சமுதாயநலம் இவை ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இனிமை காத்து வாழ்வது என்பதுதான். இதில் பல சாதனைகளும் சாதரணமாகிவிடும்.

இதற்கு உதவவே வேதங்கள்,கலைகள், புராணங்கள் என்று புரிந்து கொண்டு பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது தெரியவரும்,

மனதிற்குத்தான் எல்லாமுமே.மனம் சிலசமயம் சொன்னதைக்கேட்கும், சில சமயம் முரண்டுபிடிக்கும்,அலையும்,எப்படி வேண்டுமானாலும் மாறும், இதை கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உயிரும், உடலும் மேன்மை அடையவே இந்த வேதங்கள்,கலைகள், புராணங்கள், மதங்கள் அனைத்தும்

மனம் அடங்கிவிட்டதா,? அன்பாகவே, கருணையாகவே மாறிவிட்டதா,? இனி எச் சூழலிலும் இதிலிருந்து மாறாதா? அப்படியானால் உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல வேதங்கள்,கலைகள், புராணங்கள்.! இனி உங்களுக்கு அவை தேவையுமில்லை.

மனதோடு போராடிக் கொண்டு இருப்பவருக்கே இவையெல்லாம் தேவை

ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டால் நமக்கு நாமே பிணக்கு, அல்லது பிறரிடம் சமுதாயத்திடம் பிணக்கு என்பது எழாது. அப்படி எழுந்தால் நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

*** ***

நோய் இல்லாத உடம்பை இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்பது ஆன்மீகம் என்றால் இறைவனுக்கு இந்த மனிதர்களின் உடம்பை வைத்து என்ன செய்யப் போகிறான், ஒருவேளை சிவன் வெட்டியான் என்பதால் இந்த கருத்தோ?:))

நோய் இல்லாத உடம்பில் இறைவன் குடி கொள்வான் என்பதே குறிப்பு, நாம் உடல்நலம், உயிர்நலம் பேண வேண்டும் என்பதே இங்கு முக்கியம்,

நோய் வந்த பின் மருந்து என்பதை விட நோய் வராத நிலை வேண்டும் என்பதே ஆன்மீகம், வந்த பின் நோயை குணமாக்கலாம் என்பது அறிவியல். இதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆன்மீகத்துக்குள் அறிவியல், நோக்கம் ஒன்றுதான்.

மதம், சடங்கு சம்பிரதாயம் எல்லாமே ஆன்மீகத்தில் அடக்கம்தான், தேவையானதுதான். ஆனால் அதை புரிந்து கொள்வதில், அல்லது எடுத்து விளக்குவதில்தான் தவறு நேர்கிறது, எல்லாமே மனிதகுல மேன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது என்ற உணர்வோடு பார்த்தால் எல்லாமும் சரியாகவே இருக்கும்.

சரி இப்போது சிந்தியுங்கள் ஆன்மீகம் என்றால் ஒதுங்கிப்போவோரா நீங்கள்?:))

மீண்டும் சந்திப்போம்

Saturday, August 15, 2009

குழந்தையும், சுதந்திர தின அனுபவமும்

சுதந்திர தினத்தில் காலையில் 9.00 மணிக்கு குழந்தைகளோடு பள்ளிக்கு சென்றேன். இரண்டுமணி நேர நிகழ்ச்சி, கொடியேற்றம், பின்னர் மாணவ மாணவியரின் அணிவகுப்பு, கூட்டு உடற்பயிற்சி என கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை., பள்ளியில் சுமாராக 1800 பேர் அமைதியாக அமர்ந்து கேட்டனர். பெரிய மைதானத்தில் ’ப’ மாதிரி மாணவ மாணவியர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அனைவரும் தூய வெண்ணிற ஆடை அணிந்து அமர்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்து இருந்தது.

இறுதியாக விழா நிறைவு பெறும் நேரம் நெருங்கிவிட்டது. என்னைப்போன்ற பெற்றோர்கள் அனைவரும் சுமார் 200 அடி தொலைவில் கூடி நின்றிருந்தோம். அங்கிருந்து பார்த்தால் மாணவ மாணவியரைப் பார்த்த போது அவர்களின் முதுகுப்பக்கமே எங்கள் பார்வையில் பட்டதால் வெண்மையைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

இதிலும் எனக்கு பொதுவாக பள்ளியினுள் என் மகளை எளிதில் அடையாளம் காண இயலாது. எந்த குழந்தையைப் பார்த்தாலும் என் குழந்தைபோலவே இருக்கும், அல்லது என் மகள் கூட வேறு பெண்போல தெரிவாள். இந்நிலை பலநாட்கள் ஆகியும் இப்படித்தான்.

விழா நிறைவு பெற்றது. இனி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி. வகுப்பு ஆசிரியைகள் இனிப்பு வழங்கிக் கொண்டு வந்தார்கள்.

நாங்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை வயது குழந்தை ”அக்கா, அக்கா” என்ற சத்தம் போட்டபடி விழா நடந்த இடத்தை நோக்கி ’தத்தக்கா பித்தக்கா’ என்று ஓட ஆரம்பித்தது. அந்த நடையைப் பார்த்தால் கீழே விழாமல் நடக்க கற்றுக்கொண்டு ஒரிரு நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோர் ”அங்கே போகாதே” என சப்தமிட, அவனோ அதை காதில் வாங்காமல் ”அக்கா அக்கா” என்றவாறு 50 அடி தூரமேனும் சென்றிருப்பான்.

நானும் இன்னும் சிலரும் அக்குழந்தையின் பெற்றோரிடம் ”தடுக்காதீர்கள், பள்ளியினுள் விழா முடிந்தபின்னர் தானே போகிறான், போகட்டும்.” என்றோம்

அவர்களுக்கோ தனியாக செல்லும் குழந்தை விழா நடைபெற்ற இடத்திற்கு தனியே அவ்வளவு தூரம் நடக்க இயலுமா? நல்லபடியாக சென்றாலும் அங்கே எப்படி 1800 மாணவர்களுக்குள் தன் அக்காவை எப்படி கண்டுபிடிக்கப்போகிறான்., குழந்தைகள் கூட்டத்தில் சிக்கி விடுவனோ என்ற எண்ண ஓட்டத்துடன் நின்றிருந்தனர்.

நானோ ’உறுதியாக சென்று விடுவான், தன் அக்காவை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து விடுவான். மற்றவர்கள் குழந்தையைக் கண்டு ஒதுங்கி விடுவார்கள்’ என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்தேன்.

மாணவ மாணவியர் எழுந்து நின்றனர். ஒழுங்குடன் வகுப்பறை திரும்ப அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. யாரும் கலையவில்லை. அருகில் நின்றிருந்த வகுப்பு ஆசிரியைகளின் தலையசைப்புக்கு ஏற்ப நகர எத்தனிக்கின்றனர்.

இதற்குள் அவர்களின் முதுகுப்பக்கமாக இந்த குழந்தை அக்கா, அக்கா என்று சப்தமிட்டவாறு ஓடிக்கொண்டே இருக்கிறான். சுமார் 100 அடிதூரம் சென்றிருப்பான். இதெல்லாம் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கோ ஒரு ஆனந்த உணர்வு, அந்த குழந்தை ஓடிக்கொண்டிருக்கும் அழகு, அது தன் அக்காவை உள்ளார்ந்த உணர்வோடு அழைத்துக் கொண்டே செல்லும் பாங்கை பார்த்து, அது நானாக இல்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

மாணவ மணிகள் குழந்தை ஓடிய திசை நோக்கி திரும்பி வகுப்பறை நோக்கி நகரத் தொடங்கினர். சற்றே ஒழுங்கு குலைய முதலில் ஓடி வந்த நாலைந்து சிறுமிகளில் ஒருத்தி குழந்தையிடம் ஓடி வர அக்கா என்றவாறே அவளிடம் ஓடி ஒட்டிக்கொண்டான். அவர்கள் இருவரும் எங்களை நோக்கி வர அந்த மாணவி உண்மையிலே அந்த குழந்தையின் அக்காதான், வேறு அல்ல என்பதை அறிந்தேன்.

அதிர்ந்து நெகிழ்ந்து நின்றேன்.

இது எப்படி நடந்தது?

பெற்றோரோ அக்குழந்தை நிச்சயம் ஓடிச்சென்று அக்காவை அக்கூட்டத்தில் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்தனர்.

நானோ குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வளர்த்த வேண்டும், அவன் தனியாகவே சென்று தன் அக்காவை எப்பாடுபட்டாவது எவ்வளவு நேரமானாலும் கண்டுபிடித்துவிடுவான், இவனைப்பார்த்து இவன் அக்கா வந்து விட வாய்ப்பும் உண்டு என திடநம்பிக்கையோடு நின்றிருந்தேன்.

ஆனால் நடந்ததோ இரண்டு நிமிடத்திற்குள்ளாக தன் அக்காவை முதல் ஆளாக கண்டுபிடித்து எப்படி சேர்ந்தான்?

இதிலிருந்து நான் மீள சில நிமிடங்கள் ஆயிற்று.

நாமாக இருந்தால் ஆளை அடையாளம் கண்டுபிடிக்கும்வரை பொறுத்திருந்து. பார்த்தவுடன் அவர் காதில் விழும் வண்ணம் சப்தமிட்டு கவனத்தை ஈர்த்து அருகில் செல்வோம்.

தன் அக்கா எங்கு அமர்ந்திருப்பாள் என்று தெரியாது, முதுகு காட்டி அமர்ந்திருக்கும் அந்த கூட்டத்தில் தன் அக்கா யாரென்று தெரியாமலே ‘அக்கா அக்கா’ என அழைத்து சென்று அக்குழந்தை ஒரு நிமிடத்தில் சேர்ந்தது எப்படி?


குழந்தையின் அக்காவோ அந்த கூட்டத்தில் வரிசையில் பின்னதாக அமர்ந்திருந்தது எப்படி,?

கூட்டம் முடிந்த சில நொடிகளில் தன் தம்பியை அடைந்தது எப்படி?

இந்த நிகழ்வை என்னவென்று சொல்வது?

விதியின்படிமுன்னரே தீர்மானிக்கப்பட்டது என்றா?

அறிவியல்பூர்வமாக தற்செயலாக அமைந்த நிகழ்வு என்பதா?

மனதில் எந்த வித மாச்சரியங்களும் இல்லாமல் அன்பு ஒன்றே மனதில்நிறைந்திருக்க ஒன்றை நோக்கி சென்றால் அது கிடைத்தே தீரும் என்ற இறைவிதியாகக் கொள்வதா?


--- புரியாத பொன்னுச்சாமி

Thursday, August 13, 2009

கடவுள் எனபது என்ன? கட -- உள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வலையுலகில் தற்போது வால்பையன் அவர்கள் விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.


அவரது கருத்துகள் கடவுள் மறுப்பாக இருந்தாலும், இலாவகமாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கப்பட்ட விதத்திற்கு பதிலடியாக உள்ளது. அதற்கு வரும் பின்னூட்டங்கள் சில சமயங்களில் ஆரோக்கியமாகவும்,சில சமயம் அர்த்தமற்றதாகவும் (என் பார்வையில்), இருக்கின்றது.


கடவுள் இருக்கிறார் என சில நண்பர்கள் விவாதம் செய்யும் தொனியில், எனக்கு சில அடிப்படை விசயங்கள் அதில் தவறு என நினைக்கும்போது, அதை மிக வலுவாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்க்கின்ற இவர்களிடமும் எனக்கு குழந்தைகள் விளையாட்டுக்கு அடித்துக்கொள்வதை பார்க்கின்ற உணர்வே ஏற்படுகிறது.


சரி விசயத்துக்கு வருவோம்


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய வெட்டின நீயோ, உன் வம்சமோ இனிமேல் இருக்கக்கூடாது என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை உயிரோடு விட்டால்தான் ஆச்சரியம்.


சரி அரசாங்கமும், நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?. சிறையில் அடைத்து தண்டனை தந்துவிடும்.


அட ஒண்ண சொல்ல மறந்திட்டேனே


நான் ஒரு டாக்டர், நீங்க என்னிடத்தில் அறுவைச்சிகிச்சைக்கு வந்த நோயாளி !


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய எடுத்து, என்ன காப்பத்தின டாக்டர், நீங்களும் உங்க வம்சமும் நீண்ட நாளைக்கு நல்லா இருக்கனும் என நினைப்பீர்கள்.


உங்களை சேர்ந்தவர்களோ என்னை தெய்வமாக நினைக்கா விட்டால்தான் ஆச்சரியம்.


பாருங்க மக்கள் எப்படின்னு??


ஒருத்தர் கைய வெட்டினா அது தப்புங்கிறாய்ங்க..

இன்னொருத்தர் கைய வெட்டினா ரொம்ப நல்லதுங்கிறாய்ங்க...

ய்ஏஏஏஏஏன்ன்ன்???


செயலிலே இல்லை சரி என்பதும் தவறு என்பதும். அதன் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.


இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்??


தேங்காய், பழம் உடைத்து வைத்தால் சாமியா வந்து சாப்பிடுது? ஆனா அது ஏன் என்று மெதுவா உள்ளே கேளுங்கள், மூட நம்பிக்கையா நினைக்காதீங்க, பொருத்தமான விடை வந்து சேரும். அதுதான் தத்துவம், உள்ளடங்கிய விளைவு,


உருவ வழிபாட்டு முறையின் செயல்பாடுகளில், உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் யார் சொன்னாலும் நம்புங்க, கூடவே நம்பாதீங்க


(பொன்னுச்சாமி சகவாசத்தால் வந்த வினை, புரியற மாதிரி எழுத மறந்து போச்சு)


உருவ வழிபாட்டின் எந்த ஆன்மீக செயலாக இருந்தாலும் அதன் விளைவை கூர்ந்து கவனியுங்கள். (செயல் செய்து முடித்த பின்), ஆடி மாதம் கடவுளுக்கு கிடாவெட்டா, விளைவு உயிர்ப்பலி தேவையான்னு யோசிங்க வேண்டாம்னு ஒதுக்குங்க


திருவண்ணாமலை கிரிவலம் போகனுமா என்னபலன் மேலோட்டமா பார்த்தாக்கூட நடைப்பயிற்சிதானே! யாருக்கு நட்டம்? போயிட்டு வாங்க.


கடவுள் விசயமும் இப்படித்தான், ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம்,

பிராமணரா? முடிந்தால் சரியான நபரா என ஆராயுங்கள், சொல்றத கேளுங்க, பிடிக்கலை விட்டுடுங்க, ஆனால் சொல்றத செய்துபார்த்துட்டு, தவறுன்னு தெரிஞ்சா விட்டுடுங்க, ஆனா செய்யாமலேயே அது எப்படி சரியா வருமான்னா குழப்பம்தான் மிஞ்சும்.

எல்லாமே மனசுக்குத்தான், அது நிறைவடையத்தான் இத்தனையும்

சும்மா இயல்பா இருங்க, கடவுளப் பத்தி கவலைப்படாம இருங்க, அவரு உங்கள பார்த்துக்குவாரு. அல்லது பார்த்துக்க மாட்டாரு அப்படின்னும் வச்சுக்குங்க , ஆனா இயல்பா இருங்க,


நீங்க உங்களுக்கும் பிறருக்கும் நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மாத்திரம் செய்யுங்க, அது எதுவானாலும் சரி


செயல் செய்யும்போது ஆராய்ச்சி பண்ணாம, செய்வதற்கு முன் ஆராய்ச்சி பண்ணுங்க.,

தெரியல, புரியல அப்படின்னா செய்துட்டு அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுங்க

இத அனுபவத்தில் கொண்டு வந்து பாருங்க, விவாதம் குறையும், விளக்கம் கூடும்.



இனி வேதாத்திரி மகானின் கவிதைகள் இங்கே உங்கள் சிந்தனைக்கு....



கடவுள்

கடவுள் யார் என அறிய ஆர்வம் கொண்டு

கருத்துடனே ஆராயும் அன்பா கேளாய்

கடவுள் ஒன்றே பூரணமாம், உவமை இல்லை

கருத்தொடுங்கிக் கருத்தறிந்த நிலையில் மெளனம்

கடவுள் அணு,ஒலி,ஒளி,ஈர்ப்பு இவையாக உள்ளான்

கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக

கடவுளே அணு, அண்ட பிண்டமானான்

கருத்தானான் அந்நிலையே நீயும் நானும்.

* * *

கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்

கருத்தறியான் ஊன்றி இதைக்காணவில்லை;

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி

கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்ககூட்டி

கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு

கடவுள்! என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்

கடவுள் எங்கே? என்று பலரும் தேடுகின்றார்


நன்றி மீண்டும் சந்திப்போம்