பிறந்தது முதல், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை குறித்து கூறும், டயட்டீஷியன் ஷைனி சந்திரன்:
பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; தாய்ப்பால் தான் மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு.
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் அன்றி, வேறு உணவு தேவையில்லை.
சுகப்பிரசவம் அல்லது சிசேரியனில் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
ஆறு முதல், 12 மாதங்களில், குழந்தையின் எடை, பிறந்த போது இருந்ததை விட, இரண்டு மடங்கு கூடியிருக்கும். அதனால், 600 - 700 கலோரி வரை ஊட்டச்சத்து மிக்க உணவு, குழந்தைக்கு தேவை. தாய்ப்பால் மூலம், 400 - 500 கலோரி மட்டுமே கிடைக்கும் என்பதால், வேறு துணை உணவுகளும் கொடுக்க வேண்டியது அவசியம்.காய்கறி, நெய் சேர்த்து நன்கு மசிக்கப்பட்ட சாதம், வேக வைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வாழைப் பழம், பிஸ்கட், பப்பாளி, மாம்பழக் கூழ், சப்போட்டா என, சிறிது சிறிதாக சத்துணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று வேளையும், தாய்ப்பால் கொடுக்காவிட்டால், ஒரு நாளைக்கு ஐந்து வேளையும், இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.குழந்தைக்கு தேவையான போது, 12 - 24 மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்டலாம். அனைத்து உணவுகளையும், புதுவிதமான ரெசிபிகளாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அரிசி கஞ்சி, இட்லி, தோசை, உப்புமா, டோக் ளா, கடலை மாவு பர்பி, வெஜிடபிள் கட்லெட், பிரெட் துண்டுகளுடன் சீஸ் ஆம்லெட் என, வித்தியாசமாக தயாரித்து
கொடுக்கலாம்.இரண்டு வயதுக்கு மேல், தினமும் மூன்று வேளை உணவு கொடுக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாழைப்பழ மில்க் ஷேக், சப்போட்டா பழக்கூழ் போன்ற சத்துணவுகளையும் கொடுக்கலாம். 2 முதல், 5 வயது வரை, ஒரு குழந்தையைப் போல் மற்ற குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது.
எனவே, எந்த குழந்தையுடனும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒப்பிட்டு வருத்தப்பட வேண்டாம். 2 வயதில் சராசரியாக ஒரு குழந்தை, 2.5 கிலோ எடை அதிகரித்தும், 12 செ.மீ., உயரத்துடனும் இருக்கும். 3 - 5 வயதுக்குள், 2 கிலோ எடை அதிகரித்தும், 6 - 8 செ.மீ., வரை உயரம் அதிகரித்தும் இருக்கும். ஆறு முதல், 12 வயது வரை, குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பதின் பருவத்துக்கு முந்தைய கால கட்டம் என்பதால், குழந்தையின் எடை, 3 - 3.5 கிலோ அதிகரித்தும், உயரம், 6 செ.மீ., அதிகரித்தும் இருக்கும்.
சத்து மாவு லட்டு, தேங்காய் பர்பி, நிலக்கடலை உருண்டை, சன்னா சுண்டல், ராகி அடை, காய்கறிகள் சேர்த்த ஸ்டப்டு ரொட்டி, பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு சேர்த்த ஸ்நாக்ஸ் பார், எள்ளுருண்டை, வறுத்த நிலக்கடலை, அவல், பழ ஸ்மூத்தி போன்றவை சிறந்த உணவு!
குழந்தையின் விருப்பம், உங்களின் வசதிக்கேற்ப வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது, ஊட்டச்சத்தும் கெடாது; துாய்மைக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.
நன்றி தினமலர்